search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறைகேடு புகார்"

    டி.ஜி.பி.ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின் போது உளவுத்துறை ஐ.ஜி.யாக பணியாற்றியவர் எம்.எஸ்.ஜாபர்சேட். தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பதவி வகித்து வருகிறார்.

    இவரது மனைவி உள்பட சிலருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருவான்மியூரில் அரசு விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கூட்டுசதி, முறைகேடு, ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

    ஜாபர்சேட் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் அவர் மீது வழக்குபதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் முறையான அனுமதியை தமிழக அரசு பெற வேண்டும்.

    ஆனால் அந்த அனுமதியை பெறாமலேயே சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இதில் ஜாபர்சேட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளோம். அந்த அனுமதி கிடைத்ததும் அதை முறையாக கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்று போலீசார் உத்தரவாதம் அளித்திருந்தனர். இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு கோர்ட்டு அந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்றது.

    ஆனால் ஜாபர்சேட் மீது வழக்குபதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகலை விசாரணை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஜாபர்சேட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக டி.ஜி.பி.யாக இருப்பவர் வருகிற ஜூன் மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. பதவிக்கு என்னுடைய பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவு நகலை சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தும், இதுவரை நீதிபதி எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

    எனவே எனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்தார்.

    ஜாபர்சேட்டுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்க வேண்டும். அனுமதி இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை கீழ்கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.

    இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்ற விசாரணையை தவறாக பயன்படுத்துவதற்கு சமமாகி விடும்.

    எனவே ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர்சேட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்றார்.

    ஜாபர்சேட் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி பெறுவதற்கான முழு தகுதி பெறுகிறார். இதற்கான பட்டியலில் ஜாபர்சேட் தான் சீனியராக உள்ளார்.

    எனவே விரைவில் தமிழக டி.ஜி.பி. பதவி அவருக்கு கிடைக்கும் என தெரிகிறது.
    கோடிக்கணக்கில் முறைகேடு புகாரின் பேரில் சென்னையில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். #VigilanceDepartment #Raid
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இதன் இயக்குனராக அறிவொளி உள்ளார். இந்த பயிற்சி மையத்தின் செயல்பாட்டில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    பள்ளி மாணவர்களுக்காக இந்த பயிற்சி மையம் சார்பில் மாதஇதழ் நடத்தப்படுகிறது. அந்த மாத இதழுக்காக அரசு ஒதுக்கிய நிதியிலும், உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் கல்வியியல் பாடத்திட்டம் குறித்து நடத்தப்படும் வல்லுனர்குழு ஆலோசனைக்கூட்டத்தை நடத்தாமல், நடத்தியதாக கணக்கு காட்டி அதிலும் முறைகேடு நடந்ததாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதலில் பூர்வாங்க விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று தெரியவந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு அடிப்படையில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அறிவொளியின் அலுவலகத்திலும், கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலும் ஒரேநேரத்தில் நேற்று காலை 10 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் வசிக்கும் வீடு 3 அடுக்குமாடி குடியிருப்பாகும். கீழ்தளத்தில் அறிவொளி வசிக்கிறார்.

    இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், அதையொட்டி அறிவொளியிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். அறிவொளியின் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் அறிவொளியின் அனுமதியோடு முறைகேடுகள் அரங்கேற்றப்பட்டுள்ளது. அறிவொளியோடு, மாநில முறைசாரா கல்வித்துறை இயக்குனர் ஆர்.லதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியை சங்கீதா, காஞ்சிபுரம் மாவட்டம் அஸ்தினாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை சித்ரா, சேலம் மாவட்டம் எஸ்.எஸ்.காட்டுவளவு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர் அமலன் ஜெரோன் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மாணவர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட 2 இதழ்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.17 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் ‘உலகெல்லாம் தமிழ்’ என்ற திட்டத்துக்காக 5 வீடியோ படங்கள் தயாரிக்க ரூ.17 லட்சத்து 98 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது. கல்வி சார்ந்த பணிகளுக்காக கல்வி செயற்கை கோள் வாங்கியதிலும் ரூ.2 கோடி சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மேற்கண்ட தகவல்கள் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. #VigilanceDepartment #Raid

    காரமடை அருகே ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து கூட்டுறவு சங்க செயலாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    காரமடை:

    காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இச்சங்கத்தில் 2 ஆயிரத்தி 148 உறுப்பினர்களாக உள்ளனர். சங்க செயலாளராக மனோகரன் என்பவர் உள்ளார். சங்கத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரூ.2 கோடிக்கு மேலாக டெபாசிட் செய்து உள்ளனர்.

    இதில் மனோகரன் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவை மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் மனோகரன் கூட்டுறவு சங்கத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

    அவர் நேற்று முன்தினம் அலுவலகம் வந்ததை அறிந்த பொதுமக்கள் அலுவலகத்துதில் திரண்டனர். அவர்கள் மனோகரனை முற்றுகையிட்டு தங்களது பணத்தை திருப்பித்தரக் கேட்டனர். இதனால் மனோகரன் காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முறைகேடு தொடர்பாக புகார் கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

    இதற்கிடையே சங்க உறுப்பினர்களும் அங்கு வந்தனர். உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து பொதுமக்களின் வைப்புத் தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பார்கள் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரை தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலரை முற்றுக்கையிட்டனர்.

    ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணம், பொன்பரப்பி, மருவத்தூர், வஞ்சனபுரம், ஆலத்தியூர் உள்ளிட பல்வேறு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திலும் இன்னும்  பல்வேறு  திட்டங்கள் செயல்படாமல் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேனை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் ஒன்றிய தலைவர் சின்னபன், கந்தசாமி, பரணம் பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செழியன், அண்ணாதுரை, அருணாசலம், சபரி, பாலு  உள்ளிட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
    ×